ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தலைமையில் ஆன்மிகர்கள் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது….

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா அறக்கட்டளையும், இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில்
தமிழர் மரபுக்குரிய சிவநெறி திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன.
ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்து விட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.
எனவே, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஷா அறக்கட்டளை மற்றும் வழிபாட்டு அமைப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசுடைமையாக்கி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சேர்க்கவேண்டும்.
தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி, நம் கோயில்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக – செய்தியாளர் சந்திப்பு, சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கம் (பத்திரிக்கையாளர் கில்டு) அரங்கில் 13.04.2021 – செவ்வாய்
காலை 11.30 மணிக்கு நடைபெறும்.
தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், ஆன்மிகச் சான்றோர்கள் கருவூறார் சித்தர் பீடம் மூங்கிலடியார் அவர்கள், குச்சனூர் வடகுரு ஆதின மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவர் சத்தியபாமா
அம்மையார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், ஆவடி சைவத் தமிழ்ப் பேரவைத் தலைவர் அம்மா கலையரசி நடராசன், ஆன்மிகப் பெரியவர்கள் இறைநெறி இமயவன், திருவல்லிப்புத்தூர் மோகனசுந்தரம், சிவ. வடிவேலன், ஆசீவகம் சுடரொளி முதலியோர் கலந்து கொள்கிறார்கள். அச்சு மற்றும் காட்சி செய்தி ஊடகங்கள் தங்கள் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை, இச்செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளது.