புதுடில்லி : நாட்டில் தேங்கியுள்ள ‘செக்’ மோசடி வழக்குகளை விரைவில் தீர்க்க, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
‘செக்’ மோசடி வழக்குகள் தேக்கம் குறித்து, தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு, செக் மோசடிகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க, கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு: செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, நாடு முழுதும் செக் மோசடி வழக்குகளை விரைவில் தீர்க்க, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு, மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஆர்.சி.சவுகான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதர உறுப்பினர்களாக, ரிசர்வ் வங்கி, நிதி, நீதி மற்றும் உள்துறை அமைச்சக பிரதி நிதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். வரும், 12ம் தேதி, உறுப்பினர்களின் விபரங்களை, சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். குழு விரும்பினால், வல்லுனர்களை நியமிக்கலாம். ஆலோசனைக் குழு, மூன்று மாதங்களில் பரிந்துரையை அளிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.