குடித்து விட்டு மினி லாரி ஒட்டியதை எச்சரித்த, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை மினி லாரி ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு (56) கொற்கையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் என்பவர் குடிபோதையில் மினி லாரியை ஓட்டிவந்துள்ளார். இதையடுத்து அவரை எச்சரித்த உதவி ஆய்வாளர் பாலு, வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முருகவேல், நேற்றிரவு அதிகமாக மது அருந்தி விட்டு மற்றொரு சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து உதவி ஆய்வாளர் பாலுவை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மேலும் காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேலை கைது செய்ய 10 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முருகவேல், இன்று விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.